இந்த வழக்கில் குற்றவாளி ஆதாரத்தை கையில் கொடுத்து விட்ட போனது
போல் எல்லாம் கச்சிதமாக இருந்தது. கிட்டத்தட்ட துவக்கத்திலேயே முடிந்து போன வழக்கும்.
குற்றம் நடந்த இடம் நகுலின் வீடு. பாதிக்கப்பட்ட குழந்தை தேவி அவனது மாணவி. அவளுக்கு
தனியாக வீட்டுக்கு போய் டியூசன் எடுப்பதும் உண்டு. அத்தோடு அந்த குழந்தையிடம் தனி அக்கறை
காட்டி நெருக்கமாக பழகியவன். முன்பும் பலமுறை அக்குழந்தை அவனைத் தேடி அவன் வீட்டுக்கு
வந்ததை பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். ஒரு நாள் அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடியதைக்
கூட பக்கத்து வீட்டில் வாழும் பார்வையிழந்த வயதானவர் சாட்சியமாக குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் தேவியின் குரலை, காலடி ஓசையை நன்கு அறிவார். மிக முக்கியமான ஆதாரம் தேவியின் அம்மா
மாலதி நகுலுக்கு எதிராக ஆறுமாதங்களுக்கு முன்பு பதிவு செய்த வழக்கு. அதில் நகுல் தன்
மகளை பாலியல் தொந்தரவு செய்வதாகவும், அவளை காதலிப்பதாக தன்னிடமே வந்து வீட்டில் கூறி
சத்தமிட்டு கலாட்டா பண்ணினதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் தேவி சரியாக ஒத்துழைக்காததனால்
நகுலை வெறுமனே சில நாட்கள் வைத்து அடித்து விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். அவன்
பாண்டிச்சேரிக்கு போய் சில நாட்கள் தன் நண்பனின் வீட்டில் தங்கி இருந்தான். அங்கிருந்து
தான் ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்லும் பழக்கமும் துவங்கியது. ஆசிரம சேவை என்கிற பெயரில்
அங்கு சில நாட்கள் சென்று தங்கி ஆசிரமத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறான்.
அங்கு கிடைத்த உயர் மட்ட பரிச்சயங்கள் கொண்டு சில பணக்கார குடும்பங்களுக்கு சென்று
டியூசன் எடுத்திருக்கிறான். கராறாக ஐந்து குடும்பங்கள். மேலும் சில வீடுகளுக்கும் சென்ற
தகவலை உறுதி செய்ய முடியவில்லை. ஐந்து வீடுகளிலும் பெண் குழந்தைகள் தாம். ஒரு விநோதமான
ஒற்றுமை இந்த குடும்பப் பெண்கள் விவாகரத்து பெற்றவர்கள் அல்லது திருமணம் புரியாமல்
தத்தெடுத்தவர்கள். ஐந்து தாய்மார்களும் நகுலின் கற்பிக்கும் திறன், அறிவு மற்றும் நடத்தை
பற்றி உயர்வாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக அவனது ஆன்மீக நாட்டம், மென்மையான
அணுகுமுறை, சுயமுனைப்பு இன்மை அவர்களுக்கு மிக நல்ல அபிப்ராயம் தோன்ற காரணமாக இருந்திருக்கிறது.
ஒரு அம்மா அவன் கிட்டத்தட்ட ஒரு யோகி என சொல்லி இருக்கிறார். அதை நினைத்த போதெல்லாம்
கண்ணனுக்கு சிரிப்பு வரும். இந்த விசயத்தில் மக்கள், குறிப்பாக பெண்கள், அதிலும் முப்பதில்
இருந்து நாற்பதுக்குள் இருக்கும் பெண்கள் சுலபத்தில் ஏமாந்து விடுகிறார்கள். குழந்தைகளுக்கும்
அவன் பிரியமானவனாக இருந்தான்.
முதலில் கண்ணனின் குழுவினருக்கும் இந்த குடும்பங்களுக்கும் ஏகப்பட்ட
தகவல் குழப்படிகள் இருந்தன. அவர்கள் அவனை ஆத்மா என்றே தொடர்ந்து குறிப்பிட்டனர். போலீசிடம்
இருந்த படம் ரொம்ப பழையது. ஆனாலும் அதைக் காட்டின பின்னர் தான் அவர்களுக்கு ஓரளவு நம்பிக்கையும்
ஆத்மா என்பவன் நகுல் என்கிற சந்தேகமும் எழுந்தது. அவன் பெயரில் அவர்களுக்கு எந்த புகாரும்
இல்லை என்றாலும் தங்கள் குழந்தையின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விசயம் என்பதால் அவர்களது
அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் துரிதமாக குறிப்பிடத்தகுந்தபடியாக இருந்தது. அவர்கள்
ஆத்மா தம்மை ஏமாற்றி விட்டதாக கடுமையான கோபத்தில் பேசினர். அவன் இவர்களுக்கு எதிராக
எந்த குற்றத்தையும் பன்ணியிருக்கவில்லை என்றாலும் ஒரு அச்சம் அவர்களை தூண்டியிருக்க
வேண்டும். இவர்களில் சுகிர்தா என்றொரு பெண். 22 வயதில் அமெரிக்காவில் இருந்து திரும்பி
28 வயது வரை பெண் சாமியாராக இருந்து பின்னர் அன்றாட வாழ்வுக்கு திரும்பி ஒரு பணக்கார
நர்சரி பள்ளிக்கூடம் நடத்துகிறார். இரண்டு அனாதை ஆசிரமங்களுக்கு நிதியுதவி செய்கிறார்.
குறிப்பாக சொல்லுவதானால் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நிதி வாங்கித் தருகிறார். வெளிநாட்டினர்
குழந்தைகளை தத்தெடுக்கவும் உதவியிருக்கிறார். அப்படி ஒரு சட்டசிக்கலில் மாட்டின குழந்தையான
கிருத்திகாவை தான் பின்னர் தத்தெடுத்து வளர்க்க துவங்கி சுகிர்தா அம்மாவானார். சுகிர்தா
ஆண்கள் மீது கடுமையான அருவருப்பும் அவநம்பிக்கையும் கொண்டவர். போலீசுடன் ஒத்துழைக்க
அவர் முழுமையாக மறுத்ததுடன் அந்த விசாரணையினால் ஆசிரமத்துக்கும் குழந்தைகளுக்கும் தீங்கும்
கெட்டப்பெயரும் வரும் எனும் எதிர்ப்பை கிளப்பி முட்டுக் கட்டை போட்டவரும் இவர் தான்.
இவரால் தான் நகுல் கைது தாமதமானது எனவும் கூறலாம். ஆசிரம ஆட்களுக்கு தில்லி அளவில்
செல்வாக்கு இருந்தது. அங்கிருந்து மாநில அமைச்சர்களை தொடர்பு கொண்டு ஆசிரமத்தை தொந்தரவு
செய்ய வேண்டாம், மதரீதியான உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் ஆசிரம வாசிகளை விசாரிக்க
வேண்டாம் எனவும் உத்தரவுகள் வந்தன. ஆசிரமவாசிகள் முதலில் ஆத்மாராம் என்றொரு சாமியார்
இல்லை என்று மறுத்தனர். பின்னர் அப்படி ஒருவர் ஒரு சில நாட்கள் ஆன்மீக சேவை புரிந்திருக்கலாம்,
அவர் குறித்து மேலதிக தகவல்கள் தர முடியாது என்றனர்.
ஆசிரம தொடர்புகள் மூலம் அவனுக்கு ஒரு பெரும் புள்ளியின் நட்பு
கிடைத்திருக்கிறது. இந்த நட்பு வட்டம் ஒரு கட்டத்தில் அரசாங்க மட்டத்தில் உள்ள முக்கிய
தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொழிலதிபர்களை உள்ளடக்கிய ஒன்றில் போய் சேர்ந்து
விரிவடைந்தது. ஒரு எளிய பள்ளி வாத்தியாரான நகுலுக்கும் இந்த மேற்தட்டு உள்வட்டத்துக்குமான்
தொடர்பு ஆரம்பத்தில் கண்ணனுக்கு வெகு குழப்பமாக இருந்தது. ஆனால் அவர்களின் தொடர்புகளைக்
கொண்டு தான் அவன் தன் பெயரை ஆவணங்களில் மாற்றி போலி கல்வி சான்றிதழ்கள் பெற்று புது
பள்ளியில் வேலை வாங்கினான்.
நகுல் குற்றவாளி என்பதற்கு இரண்டாவது முக்கிய ஆதாரம் அவன் ஓடி
ஒளிந்தது மற்றும் போலி அடையாளத்தின் கீழ் பதுங்கி வாழ்ந்தது. விசாரணையின் போது தன்னுடைய
போலி அடையாளத்தின் நோக்கத்தை அவனால் நியாயப்படுத்த முடியவில்லை. தன்னுடைய கடந்த காலத்தை
மறந்து புது வாழ்க்கை ஆரம்பிக்க முயன்றதாய் அவன் உளறியதற்கு எந்த சட்டரீதியான அர்த்தமும்
இல்லை. மூன்றாவதாக குற்றம் நடந்த மூன்று நாட்களும் அவன் தன் வீட்டில் வசிக்கவில்லை
என்பதறான எந்த ஆலிபியும் அவனுக்கு இல்லை.
நகுலின் போலி அடையாளத்தை நிறுவி அவனைப் பிடிப்பதே பெரும் சவாலாக
ஆரம்பத்தில் இருந்து. ஊடகங்கள், அரசு, அதிகார மட்டங்களில் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள்.
இந்த விசாரணை மேலும் முடுக்கப்பட்டால் மேலும் பல அசௌகரியமான உண்மைகள் வெளிவரக்கூடும்
என அவர்கள் பயந்திருக்கலாம். உயர்மட்டத்தில் ஒரு பெரும் குற்றவலையின் ஒரு சின்ன கண்ணியாக
இந்த நகுல் இருக்கலாம். ஆனால் கண்ணனின் கவனம் நகுல் என்ன அந்த சின்ன ஆளின் மீது மட்டும்
தான் இருந்தது. பாம்புப்புற்றை கலைப்பதோ அதனுள் கைவிட்டு சாகசம் செய்வதோ அவன் அக்கறை
அல்ல. அவன் அதிகாரபூர்வ குழுவை கலைத்து விட்டு ஸ்ரீதர், தமிழ்ச்செல்வன், பாஸ்கரைக்
கொண்டு புது குழுவை அமைத்து அதுவரை கவனிக்காத துப்புக்களை துலக்க முடிவு செய்தான்.
பாஸ்கர் சுகிர்தாவுக்கும் நகுலுக்குமான் உறவைப் பற்றி துலக்கினான்.
அது யாரும் யோசிக்காத கோணம். சுகிர்தா ஒரு லெஸ்பியன் என்று தான் விசாரித்தவரையில் தகவல்
கிடைத்ததால் அந்த கோணத்தில் சந்தேகம் வரவில்லை. சுகிர்தாவுக்கும் நகுலுக்கும் ஒரு ஆழமான
நட்பு ஏற்பட்டிருந்தது. அது கிட்டத்தட்ட திருமணம் வரை போயிருந்தது. ஆனால் இருவருக்கும்
இடையே பாலுறவு இல்லை என பாஸ்கர் கண்டறிந்தான். நகுலுக்கு வளர்ந்த பெண்களுடன் பாலுறவில்
ஈடுபாடில்லை. சுகிர்தாவுக்கு பாலுறவு கடந்த ஒரு உயர்ந்த ஆன்மீக ரீதியாக உறவு தம்முடைய
நட்பு என எண்ணம். ஒரு ரிஸார்ட்டில் இருவரும் சேர்ந்து ஒரு வாரம் தங்கியதற்கு ஆதாரம்
கிடைத்தது. நகுல் அடிக்கடி விபச்சாரிகளிடம் செல்லும் விபரமும் அறிய வந்தது. குறைந்தது
பத்து பேரிடமாவது தொடர்பு இருந்தது. பத்தில் எட்டு பேர் முப்பது வயதுக்கு மேலான திருமணமான
பெண்கள். அவர்கள் “சாமி சும்மா வந்து உட்கார்ந்துக்கும். தொடவே விடாது. எல்லாத்தையும்
அவுத்து போட்டுட்டு பக்கத்தில் பக்கத்தில படுத்துப்போம். சாமி சிலநேரம் சுலோகம் சொல்லும்,
சிலநேரம் புராண கதைகள் சொல்லும். எதாப் பிரச்சனைன்னா மந்திரம் சொல்லி ஜெபிச்சு விடும்”
என்கிற கணக்கில் பதில் கூறியிருக்கிறார்கள். இந்த பத்தில் ஒரு பெண் மூளை வளர்ச்சி குன்றினவள்.
26 வயதிருக்கும். ஆனால் பாவனைகள், பேச்சு, நடத்தை 10 அல்லது 12 வயது குழந்தை உடையது.
இவளிடம் மட்டும் தான் நகுலுக்கு விரைப்பு ஏற்பட்டதாக அவளது அம்மாவான இன்னொரு விபச்சாரி
கூறினார். ஆனால் அந்த பெண்ணை ஒன்றும் பண்ணாமல் பக்கத்தில் அமர்ந்து பேசி விட்டு வந்து
விட்டானாம்.
சென்னையில் இருந்து தேவியின் அம்மாவை அழைத்து வந்து சுகிர்தாவிடம்
பேச வைத்தார்கள். குறிப்பாக நகுல் பற்றி, அவனுக்கும் மாலதிக்குமான உறவு பற்றி. செக்ஸ்
உறவே இல்லாவிட்டாலும் கூட நகுல் தன்னை ஏமாற்றி விட்டான் என்கிற கோபம் சுகிர்தாவிடம்
பற்றிக் கொண்டு அவரை கொந்தளிக்க வைத்தது கண்ணனுக்கே வியப்பாக இருந்தது. நகுல் என்பது
அவனது உண்மைப் பெயர் என்கிற உண்மையைக் கூட சகஜமாக ஏற்றுக் கொண்டவர், அவன் ஒரு குழந்தையை
கற்பழித்திருக்கிறான் என்பதை நம்ப மறுத்தவர் அவனது முன்னாள் காதலியிடம் பேசியதும் கடும்
வன்மம் கொண்டு வழக்குக்கு ஒத்துழைக்க முழுமையாக ஒத்துக் கொண்டார். ஆசிரம அதிகாரிகளிடம்
பேசி நகுலின் உண்மை உறைவிடத்தை கண்டுபிடிக்க உதவினார்; மிச்ச நான்கு தாய்மார்களின்
வாக்குமூலத்தை வழக்குக்கு தோதாக மாற்றி வாங்கவும் உதவினார்.
கைதுக்கு முன்பு மூன்று முறை நகுல் சுகிர்தாவின் வீட்டுக்கு
வந்து போயிருக்கிறான். சுகிர்தாவுக்கு தெரியாமல் இது அவரது மகள் ஜெனியின் உதவியுடன்
நடந்தது. கைதுக்கு பிறகும் நகுலுக்காக அதிகம் வருந்தியது ஜெனி தான். அவள் தன் அம்மாவை
இவ்விசயத்தில் மன்னிக்கவில்லை. மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறாள். தொடர்ந்து
ஒரு மாதம் அவள் யாரிடமும் பேசவில்லை. இந்த மாதிரி குழந்தைகளை எப்படி அவன் வசியம் பண்ணுகிறான்
என்பது கண்ணனுக்கு விளங்கவில்லை.

0 comments:
Post a Comment