பனிமூட்டம் உருகிப் படியும் மெழுகு போல் வானை மூடி இருந்தது.
சாலை இருபுறமும் மரங்கள் புகை வடிவங்கள் போல் மெல்ல நெளிந்தன. கொஞ்ச தூரம் ஓடி விட்டு
கண்ணன் நடைபாதை திண்டில் அமர்ந்து கொண்டான். அந்த மாதம் பனி கடுமை தான். மாசுபடுதலும்
புவி வெப்பமாதமும் என சில முரண்பாடான காரணங்கள் சொல்கிறார்கள். வருடா வருடம் இப்படியே
தான் இருக்கிறது என்கிறார்கள் சிலர். ஒருவேளை அவனுக்குள் இருந்து அந்த பனிமூட்டம் தோன்றுகிறதாக
இருக்கலாம். கொஞ்சம் குற்றவுணர்வாக கூட இருந்தது.
சில சமயங்களில் எதிரே வருபவரின் தோற்றம் புலப்படுவதில்லை. முந்தின
நாள் ஓடி வருகையில் சைக்கிள் மீது மோதி விட்டான். அதன் மீது அமர்ந்திருந்தது ஒரு பேப்பர்
போடும் சின்னப் பையன் என்பது கூட தெரியவில்லை. ஏதோ சைக்கிள் தனியாக உருண்டு வருகிறது
என நினைத்து விட்டான்.
ஆனால் இந்த மூட்டம் தரும் அந்தரங்கம் அவனுக்கு பிடித்திருந்தது.
அந்த குழந்தையின் சிதைந்து குற்றியிராய் இருந்த உடல் கண் முன் வந்தது. அதன் கால் தொடைகளில்
குருதி வழிந்து கெட்டிப்பட்டு காய்ந்திருந்தது. இடுப்புக்கு கீழ் ஆடையை கிழித்திருந்தான்.
அது கால்களை சதா அகட்டி வைத்து முனகியது. அவனுக்கு அந்த காட்சியை காண சகிக்கவில்லை.
ஒரு டவலால் மூடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள். அங்கே மேல்சட்டையை வெட்டி அகற்றிய
போது அது மார்போடு ஒட்டிக் கொண்டிருந்தது. மார்பெங்கும் பிளேடால் கீறின காயங்கள், அதில்
இருந்து வழிந்த சீழ் கெட்டியாகி ஆடையோடு ஒட்டி பற்றிருந்தது. இடுப்புக்கு கீழ் அதற்கு
மரத்து போயிருக்க வேண்டும். மார்பை சுத்தம் செய்யும் போது தான் அது சட்டென்று விழித்தது
போல் அடிக்கடி வீறிட்டது. அதன் புழைக்குள் அவன் நுழைக்க பயன்படுத்தின பெப்ஸி பாட்டில்,
டூத் பேஸ் டியூப், கத்தியின் மரப்பிடி என ரத்தம் படிந்த பொருட்களை பத்திரப்படுத்தி
குறிப்பெழுதும் போது கூட அவனுக்கு அவ்வளவாக ஆத்திரம் வரவில்லை.
ஆஸ்பத்திரியில் அதனது உடலை சுத்தப்படுத்திய பின் மருந்து போட்டு
கட்டுவதற்கு கிடத்தி இருந்தார்கள். கூட இருந்தான். அவன் சிகிச்சையின் போது கூட இருக்க
ஏன் வற்புறுத்தினான் என தெரியவில்லை. ஆனால் இருந்து உன்னிப்பாக கவனித்தான். அப்போது
அவனுக்கு எட்டு வருடங்களுக்கு முன் ரேவதியை குளிப்பாட்டியது நினைவு வந்தது. அவளாகவே
குளிக்க ஆரம்பித்த பின்னரும் கூட அவன் கூட இருக்க வேண்டும் என அடம் பிடிப்பாள். சிலவேளை
அவனும் சேர்ந்து குளிப்பான். அப்போது தான் அவனுக்கு ஒரு தனிப்பட்ட பழிவாங்கும் வெறி
தோன்றியது. அது வழக்கு விசாரணைக்கு நல்லதல்ல என அறிவான். ஆனாலும் இதை செய்தவனை கூடிய
சீக்கிரம் பிடிக்கப் போவதாய் மனதுக்குள் ஒரு காட்சியை சித்தரித்ததும் அவனுக்கு மகிழ்ச்சி
தோன்றியது.
வலி குன்றியதும் உடலில் பரவுகிற மாதிரியான விடுவிப்பின் பரவசம்.
அன்று முழுக்க அடுத்த நாள் முழுக்க அவன் அந்த பரவசத்தை நினைத்து நினைத்து உருவேற்றிக்
கொண்டான்.
இறுதியில் பாண்டிச்சேரி ஆசிரமம் ஒன்றில் தியானத்தில் ஈடுபட்டிருந்த
நகுலை கைது செய்து கொண்டு வந்த போது அந்த பரவசம் ஒரு எரிச்சலாக மாறியது. நகுல் பார்க்க
முகமயிர் அரும்புகிற வயதிலான சிறுவன் போல தோன்றினான். பருவ மாற்றம் குறித்த குழப்பம்
தரும் துறுதுறுப்பு, அசட்டை, கவலையின்மை அந்த முகத்தில் இருந்தது. ஐந்தடிக்கு கீழ்
இருந்தான். சின்ன மிருதுவான முகம். பழுப்பு கண்கள். சுருள் சுருளாய் காதுக்கு கீழ்
விழுந்து அலையும் மயிர்கள். எப்போதும் வியப்பில் இருப்பதான பாவனை. கொஞ்சம் உருட்டி
மிரட்டினால், முரட்டுத்தனமாக விசாரித்தால் கூட பதற்றம் வரவில்லை. வியப்பு மாறி ஆர்வமாக
அம்முகம் மாறியது. ஒருவேளை அது அவனது மாமூலான பாவனையாக இருக்கலாம். “உற்பத்தி கோளாறாக”
இருக்கலாம்.
முதலில் பார்த்த போது நகுல் எந்த பதற்றமும் இன்றி உட்கார்ந்து
தூங்கிக் கொண்டிருந்தான். முடியை பற்றி தூக்கிய போது ஏதோ ஆழ்தூக்கத்தில் இருந்தது போல்
மயங்கி காணப்பட்டான். அந்த கணம் கண்ணனுக்குள் மனம் துணுக்குற்றது. தவறு செய்கிறோமோ
என ஒரு விளக்க முடியாத கேள்வி.
மிருதுவான லேசான உடலமைப்பு என்றாலும் நன்றாக அடி தாங்கினான்.
ஐந்து நிமிடம் போனதும் கடுமையாக மூச்சு வாங்கினான். அவன் கைகால்கள் ஒரு ஜிம்னாஸ்டினுடையது
போல் நன்றாக வளைந்தன. லாடம் கட்டினார்கள். கொஞ்சம் முனகல், கொஞ்சம் கண்ணீர். மின் அதிர்ச்சி
கொடுத்த போது தலையை சில வெட்டுகள் வெட்டி விட்டு மயங்கி விட்டான். இரண்டு நாட்கள் கழித்து
உடல் கர்ப்பிணியை போல் வீக்கம் கொண்டிருந்தது. சட்டென்று எடை கூடி விட்டாற் போல உருண்டையாக
மாறியிருந்தான். அவனை அடிக்கும் போதும் அந்த மிருதுத்தன்மை உணர்ந்தான். சத்தம் கூட
சன்னமாக பொதென்று தான் எழுந்தது. அடியோடு வளைந்து அமிழ்ந்து கொடுப்பது போல தோன்றினான்.
எதுவுமே சாப்பிடாமல் இருந்தான். முதல் நாள் மூன்று முறை ரத்த வாந்தி எடுத்தான். கொஞ்சம்
தான். மூத்திரமும் கொஞ்சம் குருதித் துளிகளோடு வந்தது.
ஸ்ரீதர், தமிழரசன், பாஸ்கர் அவனோடு பாண்டிச்சேரி வந்தார்கள்.
ஒரு வீட்டில் பூட்டி வைத்திருந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து தான் அதிகாரபூர்வமாக
கைது செய்ததாய் தகவல் கொடுக்கப்பட்டது.
ஸ்ரீதரும் தமிழரசனும் ஒரு புலனாய்வு அதிகாரியை தாக்கி காலை உடைத்த
வழக்கில் தற்காலிக வேலை நீக்கத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் கண்ணன் தன் விசாரணைக்குழுவில்
அவர்களை வைத்திருந்தான். நம்பிக்கைக்குரியர்கள், திறமையானவர்கள், முக்கியமாக கேள்வி
கேட்காமல் வேலை செய்வார்கள். குறிப்பாக இருவருக்குள் ஒரு குற்ற மனம் இருந்தது. அது
விசாரணைக்கு ரொம்ப முக்கியம் என கண்ணன் நினைத்தான். பாஸ்கர் ஒரு முன்னாள் நக்சல். இப்போது
இன்பார்மர் வேலை. மனைவி கான்ஸ்டபிள். மூன்று குழந்தைகள். கண்ணன் தீர்வு கண்ட வழக்குகளில்
அவனது அணியில் பாஸ்கர் நிச்சயம் இருப்பான். வழக்கின் பாதி வேலையை அவன் முடித்து விடுவான்.
ஆதாரங்களை, திரட்டுவது, அழிப்பது, உருவாக்குவது என எல்லாமே. அவன் வழக்கு வெற்றி அடையும்
என சொன்னால் தான் அவர்கள் விசாரணையை முன்னெடுப்பார்கள். இல்லாவிட்டால் கிடப்பில் போடுவார்கள்.
வழக்குகளை இரண்டு வகையில் தீர்வு காணலாம். ஒன்று மேலிருந்து
கீழாக. குற்றம் நடந்த தகவலை வைத்து மேலும் தகவல்களை சந்தேகம், அனுமானங்கள், முன் எண்ணங்கள்
மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் கண்டடைந்து இணைத்து பின்னி ஒரு தெளிவான சித்திரத்தை
உருவாக்கலாம். இன்னொன்று கீழிருந்து மேலாக. குற்றவாளியை முடிவு செய்து விட்டு அவன்
குற்றத்தை நடத்தியதற்கான ஆதாரங்களை தேடுவது. அவன் வழியிலேயே போய் குற்றம் நடந்ததன்
இறுதி கணம் வரை காலத்தில் பின்னே பயணித்து வழக்கை உருவாக்குவது.
கண்ணனுக்கு எப்போதுமே ரெண்டாவது மார்க்கம் தான் வசதி. நேரம்
விரயமாகாமலும் நியாயத்தை சமரசம் பண்ணாமலும் விசாரணையை நடத்தலாம். குற்றம் என்பதும்
ஆதாரம் என்பது ஒன்று தான். குற்றவாளியை முடிவு செய்த பின் ஆதாரங்கள் அமையவில்லை என்றால்
அவன் நிரபராதி என்றாவது இல்லை. ஆதாரங்கள் மீள முடியாத படி அழிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ
இருக்கலாம். ஆக அவை உருவாக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு தர்க்கம் இருக்கிறது.
கண்ணன் என்றுமே முற்றுமுதலாக ஒரு குற்றவாளியை உருவாக்கியதில்லை.

0 comments:
Post a Comment