இந்த வழக்கில் குற்றவாளி ஆதாரத்தை கையில் கொடுத்து விட்ட போனது
போல் எல்லாம் கச்சிதமாக இருந்தது. கிட்டத்தட்ட துவக்கத்திலேயே முடிந்து போன வழக்கும்.
குற்றம் நடந்த இடம் நகுலின் வீடு. பாதிக்கப்பட்ட குழந்தை தேவி அவனது மாணவி. அவளுக்கு
தனியாக வீட்டுக்கு போய் டியூசன் எடுப்பதும் உண்டு. அத்தோடு அந்த குழந்தையிடம் தனி அக்கறை
காட்டி நெருக்கமாக பழகியவன். முன்பும் பலமுறை அக்குழந்தை அவனைத் தேடி அவன் வீட்டுக்கு
வந்ததை பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். ஒரு நாள் அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடியதைக்
கூட பக்கத்து வீட்டில் வாழும் பார்வையிழந்த வயதானவர் சாட்சியமாக குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் தேவியின் குரலை, காலடி ஓசையை நன்கு அறிவார். மிக முக்கியமான ஆதாரம் தேவியின் அம்மா
மாலதி நகுலுக்கு எதிராக ஆறுமாதங்களுக்கு முன்பு பதிவு செய்த வழக்கு. அதில் நகுல் தன்
மகளை பாலியல் தொந்தரவு செய்வதாகவும், அவளை காதலிப்பதாக தன்னிடமே வந்து வீட்டில் கூறி
சத்தமிட்டு கலாட்டா பண்ணினதாகவும் கூறியிருந்தார்.
பனிமூட்டம் உருகிப் படியும் மெழுகு போல் வானை மூடி இருந்தது.
சாலை இருபுறமும் மரங்கள் புகை வடிவங்கள் போல் மெல்ல நெளிந்தன. கொஞ்ச தூரம் ஓடி விட்டு
கண்ணன் நடைபாதை திண்டில் அமர்ந்து கொண்டான். அந்த மாதம் பனி கடுமை தான். மாசுபடுதலும்
புவி வெப்பமாதமும் என சில முரண்பாடான காரணங்கள் சொல்கிறார்கள். வருடா வருடம் இப்படியே
தான் இருக்கிறது என்கிறார்கள் சிலர். ஒருவேளை அவனுக்குள் இருந்து அந்த பனிமூட்டம் தோன்றுகிறதாக
இருக்கலாம். கொஞ்சம் குற்றவுணர்வாக கூட இருந்தது.
சில சமயங்களில் எதிரே வருபவரின் தோற்றம் புலப்படுவதில்லை. முந்தின
நாள் ஓடி வருகையில் சைக்கிள் மீது மோதி விட்டான். அதன் மீது அமர்ந்திருந்தது ஒரு பேப்பர்
போடும் சின்னப் பையன் என்பது கூட தெரியவில்லை. ஏதோ சைக்கிள் தனியாக உருண்டு வருகிறது
என நினைத்து விட்டான்.
படிப்பாளிகள்
பிரச்சனைகளில் இருந்து தப்பித்து ஓடுகிற பயந்தாங்கொள்ளிகள் என நினைத்தேன். அவரிடம் சொன்னேன்.
நான்
நினைக்கிறபடி வாழ்ந்து விடுபவன். கற்பனையில் வாழ்ந்து
விட்டு சிக்கலில்லாமல் தப்பிக்கிறவன் அல்ல என்றேன். அவர் அது
அப்படி அல்ல என்றார். “எழுதுகிறவர்கள் தாம் மாட்டிக் கொள்கிறார்கள். வரலாற்றில் எத்தனையோ உதாரணங்கள். செய்கிறவர்கள் தப்பிக்கிறார்கள். நானே ஒரு உதாரணம். நான் முதன்முதலில்
ஒரு புத்தகம் எழுதியதற்காகத் தான் கைது செய்யப்பட்டேன்” என்றார் லூயி.
அவர்
ஒரு பைத்தியக்காரன் என்று அப்போதே புரிந்தது. நான் கேட்டேன் “அப்படி என்ன எழுதினீர்கள்?”
“என்
வாழ்க்கையை பற்றி, என் நம்பிக்கைகளைப்
பற்றி. குறிப்பாக நான்
காதலித்த சில சிறுவர்களைப் பற்றி”
1
நினைவு
எனக்கு குழந்தைகளைப்
பிடிக்கும். எட்டில் இருந்து பன்னிரெண்டு வயதுக்கு உள்ளான குழந்தைகள் தாம் உலகில் மிக அழகானவர்கள். இதனை பரிசுத்தத்துக்கும் களங்கத்துக்கும் இடைப்பட்ட வயது என லூயி சொல்கிறார்.
லூயி பற்றி
கேள்விப்பட்டிருப்பீர்கள். நீண்டு பழுத்த சோகையான விழிகளுடன் பஞ்சு தாடியுடன் அவரது பேயடித்தது போன்ற முகத்தை கறுப்பு வெள்ளையில் மோசமான தரத்திலான பத்திரிகை புகைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். எங்கேயோ தொலைந்தது போன்ற அந்த பழுத்த முகம், அதிலுள்ள உள்ளொடுங்கின
நோய்மை. எனக்குக் கூட
பத்திரிகையில் அதைப் பார்க்க பார்க்க வெறுப்பு தோன்றியது. நோயாளி முகம்
எளிதில் குற்றவாளி என தோன்ற வைக்கும். வெள்ளைக்காரன் வேறு. சீரழிந்த ஒழுக்கங்கெட்ட மேற்கத்திய பண்பாட்டின் எச்சமான வெள்ளைக்காரன்.
ஆனால் நேரில்
பார்க்க லூயி எழுபதுகளில் ஹிப்பி மோகத்தில் இந்த ஆன்மீக தேசத்தை நாடி வந்து ஒரு பிரபல சாமியாரிடம் அடிமையான வெளிநாட்டு சீடன் போல இருந்தார். முற்றி காய்ந்த
வெண்டைக்காய் போன்ற தேகம். நெருக்கி அழுத்தினால்
உடைந்து விடுவார் போல. காற்றில்
அலையாடும் வெண்பஞ்சு மயிர். சதா கலங்கின
முட்டை போன்ற விழிகள். ஆனால் முகம்
மட்டும் பன்னிரெண்டு வயது சிறுவனுடையது. எனக்கு அவரை நேரில் பார்த்ததும் சிரிப்பு வந்தது. பத்து குழந்தைகளை
ஒரு அறையில் பூட்டி வைத்து கற்பழித்ததாய் சொல்லப்பட்டவர் நடப்பது உட்காருவது முகம் சுளிப்பதில் ஒரு கோமாளி போல் இருந்தார்.
அவர் தான்
முதலில் அப்படி என்னிடம் சொன்னார். குழந்தைகள் தனக்கு
கர்த்தரை நினைவுபடுத்துவதாக. நான் அவரிடம் சொன்னேன் அவர் முகம் பார்க்க கருணை வடியும் கர்த்தரை போலவே இருப்பதாக. ஏன் என
வினவிய போது எனக்கு பதில் தெரியவில்லை. அவரிடம் தனித்து தோன்றின அந்த பலவீனமாக இருக்கலாம். அது கொடுக்கிற மென்மை மற்றும் தூய்மையின் தோற்றமாக இருக்கலாம். இதெல்லாம் இப்போது யோசிக்க தோன்றுகிறது. அப்போது புரியவில்லை. லூயி ரொம்ப விசுவாசமானவர். உடனே சிலுவை வரைந்து கண் மூடி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.
நான் இதுவரை
யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை. ஏனென்றால் என்னிடமும் யாரும் மன்னிப்பு கேட்டதில்லை.
லூயி பொதுவாய்
இரவுகளில் தூங்கமாட்டார். மஞ்சள் மணிவிழிகள் தயக்கமாய் மின்ன மணிக்கணக்காய் மண்டியிட்டு நின்று எதையோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பார். வேறெந்த வேலையும் செய்ய மாட்டார். கொஞ்ச தூரத்துக்கு
மேல் நடக்க முடியாது. குளிக்க மாட்டார். சரியாக சாப்பிட மாட்டார். பல விசயங்களை
மறந்து விடுவார். மலங்கழித்து விட்டு
அலம்பாமல் அவருக்கு ஆசனப் புண் வந்து விட்டது. சாப்பிடாமல் இருப்பதற்கும்
இந்த மறதி தான் காரணம் என சொன்னார்கள். கொஞ்ச நாளில் அவரை ஸ்விஸ்ஸர்லாந்துக்கு திரும்ப அனுப்பக் கூடும். அங்கே அவர்
மீது வேறு வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இங்குள்ள வழக்கின் சம்பிரதாயங்கள் முடிந்த பின் தான் அங்கு அனுப்பவது பற்றி தீர்மானிப்பார்கள். அந்த நாள் வரை தாங்குவாரா தெரியவில்லை.
கூட இருப்பவர்கள்
என்னை ஒரு நாள் கம்பியாலும் மரக்கட்டைகளாலும் அடித்து காயப்படுத்தினார்கள். கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு. ரொம்ப தனிமையாக
இருந்த போது இடது கையால் சில துண்டு காகிதங்களில் அவளைப் பற்றி சில வரிகளை கிறுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது தான் லூயி வந்து முதன் முதலாக என்னிடம் வந்து பேசினார்.
“குழந்தைகளை துன்புறுத்தின ஒருவரோடு பேச விரும்பவில்லை” என்றேன். அவர் அலட்சியமாக “அப்படி இருந்தும் நான் உன்னோடு பேச வருகிறேனே” என்றார் அரைகுறை
தமிழில். இந்த வெள்ளைக்காரர்கள்
எவ்வளவு மோசமாக தமிழ் பேசுகிறார்கள். ஆனால் நமக்கு அது ஒரு குறையாக தெரிவதில்லை. ஏதோ மழலைப் பேச்சு போல ரசிக்கிறோம். நான் அவரிடம் ”நான் எந்த குற்றமும் பண்ணவில்லை” என்றேன். ”பிறகு ஏன் பிற கைதிகள் உன்னை அடித்தார்கள்?” எனக் கேட்டார். அதற்கு மேல்
எனக்கு பதில் பேசத் தெரியவில்லை.
நாங்கள் அதிகம்
சமீபத்தில் நடந்த விசயங்களை பேசிக் கொள்வதில்லை. தன்னுடைய கடந்த காலம் பற்றி பேசினார். வருடங்களை மாற்றி
மாற்றி குழப்பி பேசினார். இந்தியாவில் இங்கே
நம் திண்டுக்கல்லில் நடந்ததை ஸ்விஸ்ஸில் நடந்ததாகவும் அங்கே இருந்து தப்பிக்க இங்கே ஓடி வந்ததை நேர்மாறாக இந்தியாவில் இருந்து தப்பித்ததாகவும் கூறுவார். எனக்கு அதெல்லாம்
சிக்கல் அல்ல. நான் பொதுவாக
பாதி காதை திறந்த படி தான் கேட்பேன். மணிக்கணக்காக உம்
கொட்டி கேட்பேன். ஆனால் எதுவும்
மனசில் பதியாது. சோம்பலாக இருக்கலாம். இதனாலே லூயிக்கு என்னை ரொம்ப பிடித்தது. என்னிடம் நிறைய
பேசிக் கொண்டே இருப்பார்.
லூயி தான் ஒரு எழுத்தாளர் என்றார். பதினைந்து புத்தகங்கள் எழுதி இருக்கிறாராம். பெரும்பாலும் கதைகள் மற்றும் கல்வியியல் பற்றின புத்தகங்கள். சிறையில் இருந்து பழைய காகிதத் துண்டுகள், நாப்கின்களில் ஒரு நாவல் எழுதி வருவதாக சொன்னார். போன வருடம் அவர் எழுதின 650 பக்க பிரதியை காவல் அதிகாரிகள் அழித்து விட்டார்களாம். அதை இப்போது திரும்ப எழுதி வருகிறாராம். மலத்தை கூட அலம்ப மறந்து விடுகிற ஒருவர் எப்படி புத்தகம் எழுதுகிறார் எனத் தெரியவில்லை. நான் அதைக் கேட்கவில்லை. அது முக்கியமாக படவில்லை. மேலும் நான் அதிகம் படிக்கிற ஆள் இல்லை.
(தொடரும்)
